நக்சல்களிடமிருந்து ஸ்டாலின் தமிழகத்தையும், முதலமைச்சர் பதவியையும் காத்துக்கொள்ள வேண்டும் - அர்ஜூன் சம்பத் எச்சரிக்கை!
இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழகத்தை உலுக்கியது. பள்ளி கலவரக்காரர்களால் அடித்து உடைக்கப்பட்டதும், பொருள்கள் சூறையாடப்பட்டதும், பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதும், அங்குள்ள பசுமாடுகளின் பால் தரும் காம்புகள் சேதப்படுத்தப்பட்டதும் முற்றிலும் தவறான நாட்டை சீர்குலைக்கக்கூடிய செயல்.
மாணவியை பறிகொடுத்த பெற்றோர் கோபத்தில் இது செய்தது போல் தெரியவில்லை, மாறாக கலவரம் நடந்த நேரத்தில் மாணவியின் பெற்றோர் அங்கு இல்லை என்ற தகவலை பெற்றோர் சார்பில் அவர்களின் வழக்கறிஞர் கூறியுள்ளதை நாம் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டும்.
நக்சல்களிடமிருந்து முதல்வர் திரு.ஸ்டாலின் தமிழ்நாட்டை மட்டுமின்றி, முதல்வர் பதவியையும் காத்துக்கொள்ள வேண்டும்! pic.twitter.com/ALmdPX2oQa
— Arjun Sampath (@imkarjunsampath) July 21, 2022
இந்த சம்பவம் சரியாக திட்டமிடப்பட்டு கலவரத்தை செய்யக்கூடிய ஆட்கள் அங்கே முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, சரியான நேரம் பார்த்து தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியில் நாட்டு மக்களுக்கு பிரிவினைவாதத்தை மனதில் ஏற்படுத்தி அதன் மூலம் துண்டாட நினைக்கும் சில அந்நிய கைக்கூலி சக்திகளின் வேலை உள்ளது.
குறிப்பாக இதன் பின்னணியில் தந்தை பெரியார் திராவிடம் கழகம், பி.எப்.ஐ. மக்கள் அதிகாரம் போன்ற சில அமைப்புகள் மற்றும் சில அந்நிய கைக்கூலிகள் உள்ளனர். இவர்களின் வேலைதான் இது. ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஃபாக்ஸ்கான் ஆலை போன்ற இடங்களில் இதே போலவே கலவரம் திட்டமிடப்பட்டு தூண்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக இதன் பின்னணியை தேசிய புலனாய்வு முகமை முழுவதும் விசாரிக்க வேண்டும். இல்லையேல் நாட்டுக்கும், மக்களின் அமைதிக்கும் பெரிய ஆபத்து.