'தமிழக ஆளுநரின் உரை தி.மு.க-வின் ஒப்பனை செய்யப்பட்ட பொய் மூட்டை' : Dr. L. முருகன் விமர்சனம்!

Update: 2021-06-22 15:03 GMT

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுபேற்றார். இந்த நிலையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தின் சட்டசபை, ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் உரையுடன் தொடங்கியது. இந்த ஆளுநரின் உரையை பலர் காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், "ஆளுநர் உரை, தி.மு.க-வின் ஒப்பனை செய்யப்பட்ட பொய் மூட்டை பிரகடனம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை" என்று விமர்சித்துள்ளார்.


இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "புதிய அரசு அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக ஆளுநர் நிகழ்த்திய உரை பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வுரையானது தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுவதை மட்டுமே, நோக்கமாக கொண்டுள்ளது. சாத்தியமே இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்திருந்தும், மாணவர்களையும், பெற்றோரையும் ஏமாற்றும் நோக்கில் 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்று திமுக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது கவர்னர் உரையில் நீட் தேர்வு ரத்து பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. அதே போல் தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தி.மு.க வினர் மக்களிடம் சொல்லி வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டார்கள். ஆனால், இப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பது பற்றி ஆளுநர் உரையில் எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்றும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம் என்றும், காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்து மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் ஆளுநர் உரையில் இதுபற்றி வாயே திறக்கவில்லை. ஏழைத் தாய்மார்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆளுநர் உரையில் அதுபற்றி பேச்சு, மூச்சே இல்லை. இது ஏழை தாய்மார்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காகவே நடத்தப்பட்ட நாடகம் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. மொத்தத்தில் ஆளுநர் உரை, திமுகவின் ஒப்பனை செய்யப்பட்ட பொய் மூட்டை பிரகடனம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை". என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News