தேர்தல் வாக்குறுதியில் அளித்த விடியல் எங்கே.? தி.மு.க. அரசுக்கு எதிராக போராட்டத்திற்கு நாள் குறித்த அ.தி.மு.க.!
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், தங்கை கனிமொழியும், மாமன் மகன் தயாநிதியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், தங்கை கனிமொழியும், மாமன் மகன் தயாநிதியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்வது என்ற சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தார்கள். அவர்கள் மட்டுடமல்லாமல் திமுகவின் மூத்த தலைவர்களும், பிரச்சார வியூக ஆலோசகரின் அறிவுரையின்படி தயாரான தேர்தல் அறிக்கையும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது உறுதி, உறுதி, உறுதியோ உறுதி என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கியதைக் கேட்டு சரி, ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள். சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்திருக்கும் திமுக.
இப்போது நீட் தேர்வுக்கு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைத்திருக்கிறது திமுகவும், அது அமைத்திருக்கும் அரசும்!
தங்களுக்கு மட்டுமே தெரிந்த வல்லமையையும் சூத்திரத்தையும் பயன்படுத்தி திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள் சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.