அ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம்.. நாளை ஒரே மேடையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பங்கேற்பு.!

அ.தி.மு.க., தேர்தல் பிரச்சாரம்.. நாளை ஒரே மேடையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பங்கேற்பு.!

Update: 2020-12-26 18:58 GMT

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி. மைதானத்தில் நாளை, அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே மேடையில் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

2021ம் ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் களத்தில் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம்தான் இந்த பிரச்சார பொதுக்கூட்டம் என்று ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இருவரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., என்று அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் திடீரென்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். 

முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த ஓ.பி.எஸ்., கடைசி நேரத்தில் பலரின் சமாதானத்தினால் இறங்கி வந்து, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியை முறைப்படி அறிவித்தார். அது போலவே, அ.தி.மு.க.வின் பிரச்சாரத்தின் தொடக்கத்திலும் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இருவரும் இணைந்துதான் தொடங்க வேண்டும். முதலமைச்சர் முதலில் தொடங்குகிறார் என்றாலும் கூட, ஓபிஎஸ்தான் தொடங்கி வைத்திருக்க வேண்டும். அது நடைபெறாததாலும், ஓபிஎஸ்சும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்தார் என்ற தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை 27ம் தேதி அன்று அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இருவரும் இணைந்து அறிவித்தனர். அதன்படி நாளை காலை 10 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்பதால் அ.தி.மு.க.வினர் தற்போது இருந்தே மேடை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News