ஸ்டாலின் முடிவால் வருடத்திற்கு 100 மருத்துவர்களை இழக்க நேரிடும்.. எச்சரிக்கும் ராமதாஸ்.!
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை அங்கிருந்து இடமாற்றம் செய்து விட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று தமிழக மக்களைப் போல நானும் விரும்புகிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை அங்கிருந்து இடமாற்றம் செய்து விட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று தமிழக மக்களைப் போல நானும் விரும்புகிறேன்.
ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கின்றனர். இப்போது சுமார் 500 மாணவர்கள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து வருகின்றனர். இந்த வளாகத்திலிருந்து மருத்துவமனை மாற்றப்பட்டால் மருத்துவக் கல்லூரியை மூடும் நிலை உருவாகும். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.
ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையை திமுக அரசு இடமாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையை தமிழக முதலமைச்சரும், மருத்துவத் துறை அமைச்சரும் வெளியிட்ட இரு அறிவிப்புகள் தகர்த்து விட்டன. சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, ஓமந்துரார் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சட்டப்பேரவை கூட்ட அரங்கு, அமைச்சர்களுக்கான அறைகள், தலைமைச் செயலகத்திற்கான அலுவலகங்கள் போன்றவை பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு ஆகியவை தான் ஓமந்தூரார் வளாகம் மீண்டும் தலைமைச்செயலகம் & சட்டப்பேரவை வளாகமாக மாற்றப்படுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.