தி.மு.க.வினரிடம் டோக்கன் பெற்றவர்களிடம் மட்டும் நெல் கொள்முதல்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!
குறிப்பாக திருச்சி, மாவட்டம், உப்பிலியாபுரம் பகுதிகளில் 5,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது.
ஆளும் அரசான திமுகவினரிடம் டோக்கன் பெற்ற விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். விவசாயிகளை கசக்கி பிழியும் இடைத்தரகர்கள் (திமுகவினர்) மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல் கொள்முதலை தீவிரப்படுத்துங்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6ம் தேதி திருவாரூர் செல்லும் வழியில், மன்னார்குடி அருகே செருமங்கலம் என்ற நேரடி கொள்முதல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளார். அங்கு நெல் விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும், சுமை தூக்கும் தொழிலாளர்களிடமும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தாக செய்திகள் வந்தன.
அதே நேரம் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வருகின்றன. மேலும், தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
குறிப்பாக திருச்சி, மாவட்டம், உப்பிலியாபுரம் பகுதிகளில் 5,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை கொள்முதல் செய்ய தங்கநகர், பி.மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய 5 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது.
இங்கு பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ள நிலையில், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக பாதிக்கப்படும் விவசாயிகள் கூறுகிறார்கள்.
இது போன்ற சூழ்நிலையால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கிடையில், சமீபத்திய மழையினால் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் குளம் போன்று தேங்கி உள்ளதாகவும், குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 நெல் கொள்முதல் நிலையங்களில் சமீபத்திய மழையினால் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் பாழடைந்து விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது.