கோயில்களை இடிப்பதுதான் உங்க திராவிட மாடலா - பா.ஜ.க பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி!
கோயில்களை இடிப்பதுதான் உங்க திராவிட மாடலா என்று பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மத்திய அரசின் திட்டங்களினால் பயனடைந்த பயனாளிகளை பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி சந்தித்து உரையாற்றினார். அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிகரமாக 8 ஆண்டை கடந்துள்ளது. எனவே பா.ஜ.க.வின் சாதனைகளை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் பொதுமக்களுக்கு பா.ஜ.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிரதமர் மோடி உலகளவிலான தலைவராக உருவெடுத்து வருகின்றார்.
மேலும், பிரதமர் மோடி ஆத்ம நிர்பார், மேக் இன் இந்தியா திட்டங்களினால் புகழ் பெற்றுள்ளார். பொருளாதார அளவில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்தகால காங்கிரஸ் ஆட்சியை விட மிக சிறப்பாக அரசு செயல்பட்டு வருகிறது.
கொரோனா சமயத்தில் உலகமே தவித்து வரும் நிலையில், இந்தியா சார்பில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு 52 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் பிரதமரின் செல்வாக்கு உலகளாவில் உயர்ந்துள்ளது. பொதுமக்களுக்கு இலவச காஸ் சிலிண்டர், இலவச கழிப்பறைகள், ஆவாஸ் யோஜனா, கொரோனா சமயத்தில் இலவசமாக உணவு தானியம் வழங்கப்பட்டது. முத்ரா திட்டம், சாலை வியாபாரிகளுக்கு கடன் திட்டம் என்று 8 ஆண்டுகளில் மிகப்பெரிய சாதனையை பா.ஜ.க. அரசு செய்துள்ளது.
பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசு விலையை குறைக்காமல் வெறும் குற்றத்தை மட்டுமே மத்திய அரசு மீது சாட்டி வருகிறது. தி.மு.க.வை பொறுத்தமட்டில் ஒரு குடும்ப கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க. சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், கோயில்களை இடிப்பதுதான் உங்கள் திராவிட மாடலா, தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை நிறைவேற்றினார்கள் என்பது தெரியாது. தற்போது தமிழகத்தில் ரவுடிசம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.வினரும் அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை மக்களிடம் கொண்டு செல்லும் தைரியம் பா.ஜ.க.விடம் உள்ளது. இது போன்றவற்றை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களிடம் சிறப்பாக கொண்டு செல்கின்றார். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: News 7 Tamil