அணை பராமரிப்பு பணியில் இடைஞ்சல் கொடுப்பதா: கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்!

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்து இடையூறு விளைவித்துக் கொண்டிருக்கும் கேரள அரசிற்கு அதிமுகவின் கடும் கண்டனம்! அண்டை மாநிலத்தில் தோழமைக் கட்சியின் ஆட்சி நடந்தால், தோழமை உணர்வோடு பேசி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதே திறமையான ஆட்சிக்கு சான்று.

Update: 2022-03-01 12:14 GMT

முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பழுது பார்க்கும் பணிகளையும், அணையை வலுப்படுத்தும் பணிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள எவ்வித இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஆகியும், தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு நடந்து கொள்வதும், அதனை மத்திய நீர்வள ஆணையம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் மிகவும் வருத்தமளிக்கிறது.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தொடர்ந்து தடுத்துக் கொண்டே இருப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். ஏற்கனவே, கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து உள்ளிட்ட தகவல்களைப் பெற கேரள அரசு சார்பில் பொறியாளர் ஒரு வரை நியமிக்க வேண்டும் என்று கூறுவது, கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் முல்லைப் பெரியாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டது என தமிழ்நாட்டின் உரிமையில் தலையிடுகின்ற வகையில் கேரளா ஈடுபட்டு வருகின்ற நிலையில், பராமரிப்புப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவிடாமல் இடையூறு விளைவித்து வருகிறது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் கேரள கம்யூனிஸ்ட அரசை கண்டிக்கக்கூட தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தயக்கம் காட்டுவது உண்மையிலேயே வருத்தமளிக்கும் செயல் என்பதோடு, தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. திமுக அரசும் இந்தப் பிரச்சினையில் அவ்வளவு தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை.


அண்டை மாநிலமான கேரளாவில் தோழமைக் கட்சியின் ஆட்சி நடக்கிறது என்றால், தோழமை உணர்வுடன் பேசி தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதுதான் திறமையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, கேரள மாநில மந்திரியுடன் தனக்குள்ள செல்வாக்கையும், கம்யூனிஸ்ட் கட்சியுடனான நெருக்கத்தையும் பயன்படுத்தி, முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட் டிற்குள்ள உரிமையை நிலை நாட்டிட வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News