அல்வா நிகழ்வு குறித்து பேசிய ராகுல்: காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் அல்வாக்களை பட்டியலிட்ட அனுராக் தாக்கூர்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாகவே காரசாரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 29ஆம் தேதி அன்று எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பட்ஜெட் அல்வா தயாரிப்பு நிகழ்வு குறித்து பேசியது பெரும் விவாத பொருளாக மாறியது. அதாவது ராகுல் காந்தி, இந்தியாவில் பட்ஜெட் 30 அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டது. அந்த 30 பேரில் இரண்டு பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள். இதில் ஒரு எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவு அதிகாரிகளின் படங்கள் கூட ஊடகங்களில் வெளிவரவில்லை. அதோடு பட்ஜெட் அதற்கு முன்பாக அல்வா தயாரிக்கும் நிகழ்வின் படம் ஒன்றையும் குறிப்பிட்டு மக்களவையில் பேசியிருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 30) பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பொழுது, பட்ஜெட்டில் பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டி வருகிறது. 2004 - 2005 மத்திய பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும் 2009 - 2010 மத்திய பட்ஜெட்டில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை, இப்படி பல எடுத்துக்காட்டுகள் முந்தைய ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் உள்ளது. பட்ஜெட்டிற்கு முன்பு அல்வா தயாரிக்கும் நிகழ்வு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது ஒன்றும் போட்டோ எடுப்பதற்கான நிகழ்வு அல்ல உங்களது ஆட்சியிலும் அல்வா நிகழ்வு இருந்ததல்லவா? அப்பொழுது எத்தனை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி அதிகாரிகள் இருந்தார்கள் என ராகுல் காந்தி கேட்டுள்ளாரா? என்று ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதில் கேள்விகளை முன் வைத்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி அவர்களே அல்வா குறித்து நீங்கள் பேசினீர்கள், போஃபர்ஸ் ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? தேவஸ் அன்றிக்ஸ் அல்வாவை சாப்பிட்டது யார்? நேஷனல் ஹெரால்டு ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? நீர்மூழ்கியைக் கப்பல் ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? அகுஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? 2ஜி ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? காமன்வெல்த் விளையாட்டு ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? நீலகிரி ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? வால்மீகி யோஜனா ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? மாட்டுத்தீவன ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? யூரியா ஊழல் அல்வாவை சாப்பிட்டது யார்? ராகுல் ஜி நீங்கள்தான் கூற வேண்டும் இந்த அல்வாக்கள் எல்லாம் சுவையானதா? அல்லது சுவையற்றதா? என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த பொழுது சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட், அதற்குப் பிறகு நடந்த ஊழல் நடவடிக்கைகள் குறித்து ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையே அதிர வைக்கும் வகையில் கேள்விகளை முன் வைத்துள்ளார்.