
திமுகவினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிப்படக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சமீபத்தில் திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீண்டும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. இதில், தொலைநோக்கு பார்வை இல்லாததுடன், பட்ஜெட் ஆவணங்களை வாசிப்பது போல் அல்லாமல், தேர்தல் அறிக்கை போல் வாசிக்கப்பட்டது.

தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதற்காக, சில பொருளாதார நிபுணர்களை ஒருங்கிணைத்த போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக ஆகி உள்ளது. கடந்த 2021 ஜூன் மாதம் தமிழகத்தின் முன்னாள் நிதியமைச்சர், வட்டி சுமையை குறைப்பதற்காக கடனை மறுசீரமைப்பது குறித்து பேசியிருந்தார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களின் வாக்குறுதி வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது. தற்போது திமுக அரசு தனது நிர்வாக சீர்குலைவை மறைப்பதற்காக, மாநிலத்தை மற்றொரு மாநிலத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பதை அறியாமல், மாநிலத்தில் மொத்த கடனை, நாட்டின் கடனுடன் ஒப்பிட்டு பேசி வருகிறது. ரூ1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்த டாஸ்மாக் ஊழல் நிச்சயம் இந்தியாவையே உலுக்கக் கூடிய ஒரு ஊழலாக, தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தையே மாற்றக்கூடிய ஒரு ஊழலாக இருக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை என கூறினார்.