ஆன்லைன் சூதாட்டம் குறித்து தமிழக அரசுக்கு ராமதாஸ் வைக்கும் கோரிக்கை என்ன?
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அவற்றைப் போக்கி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அவற்றைப் போக்கி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு அண்மைக்காலங்களில் மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்தது ஆன்லைன் சூதாட்டங்கள் தான். குறைந்த காலத்தில் மிக அதிக வருவாய் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தையுடன் கூடிய மாய வலையை வீசும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், அதில் மயங்கி சூதாட வரும் இளைஞர்களின் பணத்தை முற்றிலுமாக சுரண்டி, மீள முடியாத கடன் வலையில் சிக்க வைக்கின்றன. கடன் வலையில் இருந்து மீள முடியாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டனர். அதைத் தடுக்க தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த நவம்பர் 21-ஆம் நாள் அவசர சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்தது. அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிப்ரவரி 25-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அச்சட்டம் தான் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கத்தை உயர்நீதிமன்றம் விமர்சிக்கவில்லை. அதன்மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது. மாறாக, சில நுட்பமான காரணங்களின் அடிப்படையில் தான் இந்தச் சட்டத்தை செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல என்று உச்சநீதிமன்றம் பல தருணங்களில் தீர்ப்பளித்து உள்ளது; சட்ட ஆணையமும் இதே கருத்தைத் தான் தெரிவித்திருக்கிறது. அந்த அடிப்படையில் தான் ''ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடியாது; முறைப்படுத்துவதற்கு மட்டுமே முடியும்'' என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.