போலீசார் இருந்தும் பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எப்படி? கைதான நபர் சொல்லும் காரணம்!
சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் 3 பாட்டில் நிரப்பப்பட்ட பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் 3 பாட்டில் நிரப்பப்பட்ட பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் கமலாலயம் செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் போலீசார் சுழற்சி முறையில் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம் போல போலீசார் நேற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் டூ வீலரில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் அங்கு எப்படி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்ற கேள்வி பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதனிடையே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. மேலும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக இருக்கின்ற காரணத்தினால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான நபர் கூறியிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி நிர்வாகிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Facebook