ஆசிரியர் தகுதிச்சான்றை ஆயுட்கால சான்றாக மாற்றுங்கள் - ராமதாஸ் கோரிக்கை !
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதி பெறுவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்காலமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், அடுத்தத் தேர்வை நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதி பெறுவதற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்காலமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், அடுத்தத் தேர்வை நடத்துவது எந்தவகையிலும் நியாயமல்ல.
இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி, 2012-ஆம் ஆண்டும், அதன்பின்னர் 2013-ஆம் ஆண்டும் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால், மீண்டும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 2013-ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு முடிவு அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் நியமனமே நடைபெறவில்லை. இத்தகைய சூழலில் அவர்களின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் இம்மாத இறுதியுடன் காலாவதியாகிறது.
2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணியில் சேர முடியாதது அவர்களின் தவறு அல்ல; அரசின் தவறு தான். ஒவ்வொரு கல்வியாண்டும் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அவ்வாறு ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெறாத நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை வாழ்நாள் முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியது. அடுத்த இரு மாதங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்திலும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.