தேர்தல் வேலைகளை துரிதப்படுத்திய அ.தி.மு.க - துவங்கியது ஆட்டம்.!

#EPS #OPS #ADMK

Update: 2020-12-15 08:46 GMT

தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஆளும் அ.தி.மு.க அரசின் தலைவர்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட நேற்று தலைமை அலுவலகத்தில் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை  அலுவலகத்தில் அ.தி.மு.க. மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஆலோசனை கூட்டத்தின்போது, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் ஒரு அறையில் அமர்ந்து மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களை வரவழைத்து, "உங்கள் மண்டலத்தில் எத்தனை பூத்கள் உள்ளன? எத்தனை பேரை உறுப்பினர்களாக பூத்களில் நியமித்திருக்கிறீர்கள்?" என்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

மேலும், "இளைஞர்/இளம்பெண்கள் பாசறையில் இருந்து 25 பேர், பெண்கள் 25 பேர் மற்றும் ஏற்கனவே நியமிக்கப்பட இருந்த கட்சிக்காரர்கள் 25 பேர் என மொத்தம் 75 பேர் கொண்ட பூத் கமிட்டியை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் நியமிக்கப்பட வேண்டும்.

அதன்படி ஒரு பூத்துக்கு 75 பேரை உறுப்பினர்களாக நியமித்தால் நமக்கு வெற்றி நிச்சயம். இந்த 75 பேரின் படங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய பட்டியலை உடனடியாக தயாரிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பூத்களிலும் 75 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்ற உத்தரவை பிறப்பித்தனர்.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பணிகள் வேகம் எடுக்க துவங்கியுள்ளன.

Similar News