இயற்கை மரணங்களை கொச்சைப்படுத்திய உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம்- சோனாலி ஜெட்லி, பன்சூரி ஸ்வராஜ் ட்விட்!
திமுக எம்.பியும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரைப் பற்றி மிகுந்த அவதூறாகவும், ஆபாசமாகவும் இரண்டு, மூன்று முறை பேசியது நாடு முழுவதும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி தேர்தல் ஆணையம் அவரை 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்தும், நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் உத்தரவிட்டது.
அவரை நிறுத்திவைத்து சில மணிநேரங்களிலேயே தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர், தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டார். ஏற்கனவே சசிகலா மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வரலாறு அவருக்கு இருந்தாலும், பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பல சீனியர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தான் உதயநிதி ஸ்டாலின் இந்த பதவிக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த உண்மையான குற்றச்சாட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு அதிகப்படியான எரிச்சலையும் கோபத்தையும் உள்ளாகி இருப்பது தெளிவாக தெரிகிறது. கட்சியின் உள்ளேயே அவர் மேல் இருக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் முணுமுணுப்புகளை பிரதமர் மோடி வெளிப்படையாக உடைத்து விட்டாரா என்ற கேள்விகள் பல எழுந்தன.
பிரதமர் மோடியும் பல சீனியர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தான் பதவிக்கு வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். இது சரியான ஒப்பீடு அல்ல என்று பலரும் அதற்கு பிறகு கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தந்தையும், தாத்தாவும் பா.ஜ.க கட்சி தலைவர்கள் அல்ல.
இத்தகைய 'பதிலடி' போதாதென்று, தற்பொழுது மறைந்த பா.ஜ.க தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லியின் இயற்கையான மரணங்கள் குறித்தும் அதற்கு பிரதமர் மோடி தான் ஒருவகையில் காரணம் என்ற தொனியில் அவர் பேசியது, தேசிய அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியது.
ஒரு தெருமுனைப் பிரச்சாரத்தில் இறந்துபோன தலைவர்களின் மரணத்தைக் குறித்து கொச்சைப்படுத்த வேண்டிய காரணம் என்ன? சமூக வலைத்தளங்கள், கேமராக்கள், வீடியோக்கள் அனைத்தையும் தாண்டி இந்த மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க தி.மு.கவினர் முயல்வது போல் தெரியவில்லை. சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லியின் மகள்கள் ட்விட்டரில் தங்களுடைய வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர்.