நெல்லை: ஒரே நாளில் மூன்று அம்மன் கோயில்களில் தாலி, உண்டியல் பணம் திருட்டு: பக்தர்கள் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே உள்ள 3 ஊர்களில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் நேற்று அதிகாலையில் தாலி உள்ளிட்ட நகைகள் மற்றும் உண்டியல் பணம் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணகுடி அருகே வடலிவிளை என்ற கிராமம் உள்ளது. அங்கு பத்திரகாளி அம்மன் கோயிலில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி விஜயராஜ் சென்றுள்ளார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதன் பின்னர் அவர் ஊர்த்தலைவருக்கு தகவலை சொல்லியுள்ளார். இது பற்றி பணகுடி காவல் நிலையத்துக்கு ஊர் தலைவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் காதில் இருந்த கம்மல் உள்ளிட்டவைகள் திருடு போனது தெரியவந்துள்ளது.
அது மட்டுமின்றி கோயிலில் இருந்த உண்டியலையும் தூக்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் உண்டிலை தூக்கி செல்லும் வீடியோ காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதே போன்று சுப்பிரமணியபுரம் மற்றும் கலந்தபனை அம்மன் கோயிலும் மர்மநபர்கள் அம்மன கழுத்தில் இருந்த தாலியை திருடி சென்றுள்ளனர். ஒரே நாளில் 3 கோயில்களில் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில்களில் திருடு போன சம்பவங்களை கேள்விப்பட்ட பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai