சீனாவின் மூக்கை உடைக்க ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கிறதா இந்தியா?
சீனாவின் மூக்கை உடைக்க ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கிறதா இந்தியா?
நேபாளம் மற்றும் பூட்டானுக்கு வடக்கே உள்ள இடம் திபெத். இமயமலையின் உச்சி சரிவில் சீனாவின் கடைசி எல்லையாகவும், அதே சமயம் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் பல நூறு ஆண்டுகளாக தனி சுதந்திர நாடாகவும் 1959ம் ஆண்டுவரை இருந்த ஒரு நாடாகும். தலாய்லாமாதான் இந்த சிறிய தேசத்தின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவராக இருந்தவர்.
நேபாளம் நமக்கு சொந்த நாடு அல்ல, ஆனால் ஹிந்துக்கள் என்ற முறையில் சொந்தக்காரர்கள் நாடு. திபெத்தும் அப்படித்தான், அது நம் சொந்த நாடு அல்ல, என்றாலும் ஹிந்து மதத்திலிருந்து பிரிந்து சென்ற கிளை மதம் என்பதாலும், புத்தர் மீது இந்தியர்களுக்கு இருந்த மதிப்பு காரணமாக அதுவும் இந்தியாவுக்கு ஒரு சொந்தக்காரர்கள் நாடாகவே கருதப்படுகிறது. மேலும் தலாய்லாமாவும், அவரது புத்தமத பிரிவினரும் பரம்பரை, பரம்பரையாக சீனர்களை விட இந்தியாமீது அதிக நட்பைக் கொண்டவர்கள். இந்தியாவை ஒரு தாய் வீடு போல கருதுபவர்கள். இந்திய கலாச்சாரத்தை விரும்புபவர்கள்.
ஆனால் திபெத்தியர்கள் இந்தியா மீது கொண்டிருக்கும் நெருக்கம் சீனாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் சீனா இன்னமும் லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை தங்களுடைய முப்பாட்டன் சொத்து என நினைக்கிறது. தங்களது சொத்தை இந்தியா அனுபவிப்பதாக நினைத்து தினமும் எல்லையில் 73 ஆண்டுகளாக குடைச்சல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் அருணாச்சல பிரதேச மக்கள் விரும்பி எப்படி இந்தியாவுடன் இணைந்து கொண்டார்களோ, லடாக் வாசிகள் எப்படி இந்தியாவுடன் தங்களை ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டார்களோ அதேபோல தலாய்லாமா தலைமையில் உள்ள திபெத்தியர்களும் இந்தியா பக்கம் சாய்ந்து விட்டால் திபெத்தை இழந்து விடுவோம் எனக் கருதிய சீனா 1959ம் ஆண்டு தனது பெரும் பீரங்கிப் படையுடன் திபெத்திற்குள் நுழைந்து சாதுக்கள் நிறைந்த அந்நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது.
இந்தியா உட்பட உலகம் சீனாவின் இந்த செயலை கண்டித்தது. ஆனால் சீனாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால், அந்த நாட்டின் தலைவராக இருந்த தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவருடன் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான திபெத்தியர்களும் சீனாவின் கொடுமைகளுக்கு பயந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார்கள்.
அவருக்கு இந்திய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்தது. இப்போதும் திபெத்திலுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் திபெத் பூமி சீனர்களிடமிருந்து சுதந்திரம் அடைய வேண்டும், இந்தியாவில் உள்ள தலைவர் தலாய்லாமா தம் மக்களுடன் திரும்பி மீண்டும் நாடாள வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் சீனர்களுக்கு அடங்கி ஒடுங்கி அங்கே அடிமைபோல கிடக்கிறார்கள்.