3 நாளில் ராக்கெட் தயாரிக்கும் அளவுக்கு திறன் : இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் பயணம் வெற்றி!

Update: 2022-11-19 02:18 GMT

விண்வெளித்துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தனியார் விண்வெளி நிறுவனங்கள் இஸ்ரோவின் திறன்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளித்துறை அண்மைக்காலத்தில் தொலைதூர மருத்துவம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கியமான துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை ஏறுமுகத்தில் இருப்பதாக  கூறினார்.

இந்தியாவின் முதலாவது தனியார் துறை ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள செலுத்து தளத்தில் இருந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.

ப்ராரம்ப் (தொடக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தின் மூலம் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, என்-ஸ்பேஸ்டெக் இந்தியா, பஸூசும் அர்மீனியா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. 80 கிலோகிராம் எடை கொண்ட இவை தனியார் நிறுவனத்தின் கலாம் 80 உந்துவிசையை பயன்படுத்தி 545 கிலோகிராம் எடைகொண்ட செலுத்துவாகனம் மூலம் செலுத்தப்பட்டன.

நாட்டின் தனியார் புத்தொழில் நிறுவனங்களுக்கு இஸ்ரோவின் ஆதார வளங்களை பயன்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறை ஆணையமான இன்-ஸ்பேஸ் மூலம் இந்த செயற்கைக்கோள் செலுத்துவதன் நடைமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஐதராபாதை தலைமையிடமாக கொண்டது. 72 மணி நேரத்தில் புதிய ராக்கெட்டை உருவாக்கும் திறன் கொண்டது.  இந்த நிறுவனம் இன்று தனது செலுத்துவாகனம் மூலம் மூன்று செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

Input From: PIB

Similar News