விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் இணைவது எப்படி ?
விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் இணைவது எப்படி ?
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மிகவும் முக்கிய திட்டமாக இருப்பது பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா திட்டம், இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இது வரை 20 இலட்சத்து 87 ஆயிரத்து 123 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
பிரதமரின் கிஸான் மன் தன் யோஜனா என்ற திட்டம் நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் சமூக பாதுகாப்பிற்காகவும், விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் கடந்த 2019 ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சிறு தொகையினை செலுத்துவதன் மூலம் விவசாயிகள் 60 வயதை அடையும் போது, அவர்களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000 பெற முடியும். மத்திய அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20,87,123 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தில் இணைவது எப்படி, இதற்கான விதிமுறைகள் மற்றும் பயன்கள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
18 முதல் 40 வயதுக்குட்பட்டும், இரண்டு ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நில உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் இணையும் விவசாயி அவரின் வயதுக்கேற்ப மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பணம் செலுத்த வேண்டும். இப்படி பணம் பங்களிப்பு செய்வது அவருக்கு 60 வயது ஆகும் வரை தொடரும். அதைத் தொடர்ந்து விவசாயி தனது ஓய்வூதியத் தொகையை மாதம் தோறும் கோர முடியும்.
ஒரு குடும்பத்தில் உள்ள கணவனும், மனைவியும் தனித்தனியாக விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். பயனாளர் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூபாய் 3,000 என வருடத்திற்கு 36,000 வீதம் உதவியாக தனது வயதான காலத்தில் பெறலாம்.