வந்தே பாரத் 7ஆம் கட்ட பயணம் அக்டோபர் 29ம் தேதி மீண்டும் தொடக்கம் : இதுவரை 27 லட்சம் பேர் நாடு திரும்பினர்.!
வந்தே பாரத் 7ஆம் கட்ட பயணம் அக்டோபர் 29ம் தேதி மீண்டும் தொடக்கம் : இதுவரை 27 லட்சம் பேர் நாடு திரும்பினர்.!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் 7ம் கட்டப் பயணம் அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அக்டோபர் 25ம் தேதி மட்டும், 4,322 இந்தியர்கள் வந்தே பாரத் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
ஷார்ஜாவில் இருந்து திருச்சிராப்பள்ளி திரும்பிய 125 பேரும், அபுதாபியிலிருந்து சென்னை மற்றும் மதுரை திரும்பிய 125 பேரும், டொரன்டோவில் இருந்து தில்லி மற்றும் சென்னை திரும்பிய 307 பேரும், சிகாகோவில் இருந்து தில்லி மற்றும் சென்னை திரும்பிய 321 பேரும் இதில் அடங்குவர்.
கொரோனா முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை, மத்திய அரசு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதன் முதல் கட்டப் பயணம் கடந்த மே 7ம் தேதி தொடங்கி, மே 17ம் தேதி வரை நீடித்தது. அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு 84 விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
வந்தே பாரத் 2ம் கட்டப் பயணம் மே 16ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 3ம் கட்டப் பயணம் ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை நீடித்தது. அப்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு 130 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 4ம் கட்டப் பயணம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. 5ம் கட்டப் பயணத்தில், 766 விமானங்கள் ஷார்ஜா, அபு தாபி, துபாய், பாங்காங்க், கொழும்பு, டேரஸ் சலாம், ரியாத் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டது.