காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அபார முயற்சி பிஎஸ்6.!

காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அபார முயற்சி பிஎஸ்6.!

Update: 2020-10-19 15:02 GMT

காற்று மாசு மற்றும் அதை எதிர்கொள்ள மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர், நேரடியாக கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலில் பேசிய அவர், காற்று மாசுவை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த முழுமையான அணுகுமுறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாகவும், இதே அணுகுமுறையை தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 122 நகரங்களில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் 2024ம் ஆண்டுக்குள், பிஎம் 2.5 நுண் துகள் உட்பட காற்று மாசுவை 20 முதல் 30 சதவீதம் குறைக்க, தேசிய தூய்மை காற்று திட்டம் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

காற்று மாசு பிரச்னை, உலகம் முழுவதும் இருப்பதாக கூறிய மத்திய அமைச்சர், இந்தியாவில் காற்று மாசுவுக்கு வாகனம் மற்றும் தொழிற்சாலை புகை, கட்டுமான இடங்களில் ஏற்படும் தூசி, குப்பை எரிப்பு, அறுவடைக்கு பிந்தைய எரிப்பு, மோசமான கழிவு மேலாண்மை போன்றவை காரணமாக உள்ளது என தெரிவித்தார். வட இந்தியாவில் குளிர்காலத்தில், பனி மூட்டத்துடன் இந்த புகை மற்றும் தூசி ஒன்றாக கலக்கும்போது, காற்று மாசு மேலும் அதிகரிக்கிறது என பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல நடவடிக்கைகளை அமல்படுத்தி வருவாதக முகநூல் நேயர்களிடம் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் மாசில்லா காற்று நாட்கள் இந்தாண்டில் 218 ஆக அதிகரித்தது என்றும், இது கடந்த 2016ம் ஆண்டில் 106 நாட்களாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். 




 


நாடு முழுவதும் இந்தாண்டு ஏப்ரல் முதல் பிஎஸ் 6 தர குறியீடுடன், வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது புரட்சிகரமான நடவடிக்கை என்றும், இது வாகன புகையை குறைக்க பெருமளவில் உதவியாகவும், அமைச்சர் கூறினார். பிஎஸ் 6 எரிபொருள், டீசல் கார்களில் நைட்ரஜன் ஆக்சைடு அளவை 70 சதவீதமும், பெட்ரோல் வாகனங்களில் 25 சதவீதமும், வாகனங்களில் காரியம் அளவை 80 சதவீதம் குறைக்கிறது.

காற்று மாசுவை குறைக்க, மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்பாட்டை குறைத்து, மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும், சுத்தமான எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

பதர்பூர் மற்றும் சோனிபட் அனல் மின் நிலையங்களை மூடுவது, செங்கல் கில்ன்ஸில் ஜிக் ஜாக் தொழில்நுட்பங்களுக்கு மாற்றுவது, 2800 தொழில்கள் பிஎன்ஜி எரிபொருளுக்கு மாறுதல் மற்றும் பெட்கோக் மற்றும் உலை எண்ணெய் மீதான தடை உள்ளிட்ட தொழில்துறை கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள மாசுபட்ட பகுதிகள் குறித்த முழுமையான தகவல்களை வழங்கும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து, சமீர்-SAMEER ஆப் குறித்து நெட்டிசன்களுக்கு தகவல் தெரிவித்தார். சிவப்பு அடையாளத்துடன் அதிக மாசுபடும் பகுதிகளை இது அடையாளம் காட்டுகிறது.

Similar News