மீண்டும் தீவிரமடையும் ககன்யான் திட்ட பணிகள்.!

மீண்டும் தீவிரமடையும் ககன்யான் திட்ட பணிகள்.!

Update: 2020-10-19 14:15 GMT

இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் பணிகளை இஸ்ரோ கொரோனா ஊரடங்கு தளர்விற்குப் பின் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. விண்வெளிக்கு செல்லும் நான்கு இந்திய விமான படை வீரர்கள் பயிற்சி பெற ரஷ்யா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


இந்தியாவின் கனவு திட்டமான இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை 2022ம் ஆண்டிற்குள் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் கொரோனோ வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இது தொடர்பான பணிகள் கடந்த 5 மாதங்களாக பாதிக்கப்பட்டன.

இந்தத் திட்டத்திற்காக இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இஸ்ரோவுடன் பணியாற்றி வருகின்றன. வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் சுகாதார வசதி ஆகியவை தொடர்பான ஆய்வுப் பணிகள் டி.ஆர்.டி.ஓ நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில் மேலும் பல நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து இஸ்ரோ பணியாற்றி வருகிறது. குறிப்பாக ரஷ்யா பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு உதவி வருகின்றன. இந்தியா 59 நாடுகளுடன் விண்வெளித் துறையில் பல ஒப்பந்தங்களை செய்துள்ளது. இதன் மூலமாக பல நாடுகளும் தங்களது விண்வெளிப் பயணம் சார்ந்த உதவிகளையும் இந்தியாவுக்கு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இதன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ககன்யான் திட்டம் 2022 ஆகஸ்ட் மாதம் ஜி‌.எஸ்.எல்.வி மார்க்-3 ரக ராக்கெட் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Similar News