ஜிகாதை எதிர்த்துப் போராடும் வீரர்களுக்கு நிலமில்லை என்பதா? - நில உரிமைச் சட்டத்துக்கு பண்டிட்டுகள் ஆதரவு.!

ஜிகாதை எதிர்த்துப் போராடும் வீரர்களுக்கு நிலமில்லை என்பதா? - நில உரிமைச் சட்டத்துக்கு பண்டிட்டுகள் ஆதரவு.!

Update: 2020-10-30 14:39 GMT

ஜம்மு-காஷ்மீரில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்குவதை அனுமதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பல காஷ்மீர் பண்டிட் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் புதிய நில உரிமைச் சட்டங்களை உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை (அக்டோபர் 26) அறிவித்தது. இதன் மூலம் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலம் வாங்க இந்த சட்டம் வழி வகுத்துள்ளது


ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீரி அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரின் நிலம் மற்றும் வளங்களை கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் காஷ்மீரின் அடையாளத்தை அழிப்பதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

அரசியல்வாதிகள் இவ்வாறு கூறியுள்ள நிலையில் அடிப்படைவாத முஸ்லிம்களால் காஷ்மீரில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் ஒன்று சேர்ந்து வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் நிலச் சட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாகக் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் காஷ்மீர் பண்டிட் அமைப்புகளில் ரூட்ஸ் இன் காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் விச்சார் மன்ச் மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூக இளைஞர்களின் பனூன் காஷ்மீர் அமைப்பு ஆகியவை அடங்கும்.

காஷ்மீரி இந்துக்கள் தங்களது சமூகம் அல்லது பிராந்தியம் சார்ந்த சுயநல்த்தை விட அனைத்து இந்தியர்களின் உரிமையையே முன்னிலைப்படுத்தி வந்துள்ளதாகக் கூறியதோடு, "நாங்கள் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தாலும் இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்" என்று ஜம்மு காஷ்மீர் விச்சார் மன்ச் தலைவர் திலீப் மட்டூ தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரும் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் ஜிகாத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்த நிலத்தில் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது நியாயமற்றது" என்று ரூட்ஸ் இன் காஷ்மீர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராகுல் மஹனூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு விதமான மக்களும் ஜம்மு-காஷ்மீரில் குடியேறுவதே ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் ஜிகாதை எதிர்க்க சிறந்த வழி என்று என்று பனூன் காஷ்மீரி அமைப்பின் செயலாளர் வித்தல் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Similar News