அடுத்த 30 ஆண்டுகளுக்கு காஷ்மீரை கட்டமைக்க இப்போதே பிளான் ரெடி : மத்திய அரசின் அடுத்த கட்ட முடிவு!
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற பிரதமரின் கனவு நனவாகிறது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பிரதமரின் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் மக்களுக்கும், நாட்டுக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு பயனளிப்பதாக கூறிய அவர், அடிமட்டத்திலிருந்து இப்பணிகள் நடைபெற்று வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மக்கள் முதலீடு செய்து வருவதாக அவர் தெரிவித்தார். அரசியல் பிரிவுகள் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
11,721 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 13,600 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 7 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், 12 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 50,000 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.