IIT, IIM மற்றும் AIIMS போன்ற கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன - மோடி பெருமிதம்.!

IIT, IIM மற்றும் AIIMS போன்ற கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன - மோடி பெருமிதம்.!

Update: 2020-10-20 10:42 GMT

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களான IITs, IIMS, IIITs and AIIMS போன்ற நிறுவனங்களை மத்திய அரசு தற்போது நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் நிறுவி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார்.



மைசூர் பல்கலைக் கழக நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய நரேந்திர மோடி, "கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் மொத்தம் ஏழு புதிய ஐ.ஐ.எம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நாட்டில் 13 ஐ.ஐ.எம்கள் மட்டுமே இருந்தன. இதேபோல் 7 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள் மட்டுமே நாட்டிற்கு சேவை செய்து வந்தன. 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவற்றின் எண்ணிக்கை நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 15 எய்ம்ஸ் நிறுவப்பட்டுள்ளன சிலவற்றை கட்டமைக்கும் பணி நடந்து வருகிறது. "என்று பிரதமர் கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் 2014ஆம் ஆண்டு வரை நாட்டில் மொத்தம் 16 IITக்கள் மட்டுமே இருந்தன என்றும் ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய ஐ.ஐ.டி திறக்கப்பட்டுள்ளது என்றும் இவற்றில் ஒன்று கர்நாடகாவின் தர்வாடிலும் கூட திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 9 ஐ.ஐ.ஐ.டி.கள் மட்டுமே இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 16 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIIT கள்) நிறுவப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உயர்கல்வியில் உள்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார். "கடந்த 5-6 ஆண்டுகளில் நாம் கல்வி முறையை மாற்றுவதன் மூலம் 21ஆம் நூற்றாண்டில் முன்னேற நம் மாணவர்களுக்கு உதவ தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

உயர்கல்வித் துறையின் முயற்சிகள் புதிய கல்வி நிறுவனங்களைத் திறப்பதில் மட்டுமல்லாமல், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பாலினம், சமூக பங்களிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. கல்வியின் ஒவ்வொரு மட்டத்திலும், பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் நாடு முழுவதும் உள்ள ஆண்களை விட அதிகமாக உள்ளது. உயர்கல்வியில் கூட புதுமை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது" என்று பிரதமர் தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய அவர், "தேசிய கல்வி கொள்கை என்பது நாட்டின் கல்வி அமைப்பில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான மிகப்பெரிய முயற்சியாகும். திறமையான இளைஞர்களை இன்னும் போட்டிக்கு உட்படுத்த பல பரிமாண அணுகுமுறையில் கவனம் செலுத்தப்படுகிறது "என்று கூறினார்.

Similar News