முந்தைய காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும், பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா 5 மடங்கு அபார வளர்ச்சி!

Update: 2022-10-31 03:41 GMT

பிரதமர் பெருமிதம் 

'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்ற பெருமையுடன் கூடிய பெரிய பயணிகள் விமானங்களை இந்தியா விரைவில் தயாரிக்கும் என பிரதமர் மோடி கூறினார். விமானப் போக்குவரத்து தொடர்பான உலகின் முதல் மூன்று நாடுகளில் நாம் நுழைய உள்ளோம். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2000க்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். கடந்த 8 ஆண்டுகளில் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கிய பிரதமர், நாட்டில் உற்பத்திக்கான முன்னெப்போதும் இல்லாத சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது என்றார். எளிமைப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் வரிக் கட்டமைப்பை உருவாக்கி, உலக அளவில் போட்டியை உருவாக்குதல், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுதல், 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை 4 குறியீடுகளாகச் சீர்திருத்துதல், 33,000 விதிகளை ரத்து செய்தல் போன்றவற்றை பிரதமர் பட்டியலிட்டார்.

அதிகரிக்கும் முதலீடு 

கடந்த எட்டு ஆண்டுகளில், 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதுபோன்ற வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் அல்லாமல், பொருளாதாரத்தின் 61 துறைகளில் பரவி, இந்தியாவின் 31 மாநிலங்களை உள்ளடக்கியதாக அவர் மேலும் விவரித்தார். விண்வெளித் துறையில் மட்டும் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

5 மடங்கு வளர்ச்சி 

2014க்குப் பிறகு, இந்தத் துறையில் முதலீடு 2000 முதல் 2014 வரை முதலீடு செய்யப்பட்டதை விட 5 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் தற்சார்பின் முக்கியமான தூண்களாக இருக்கப் போகின்றன என்பதை திரு மோடி உறுதிபட தெரிவித்தார். "2025 ஆம் ஆண்டிற்குள் நமது பாதுகாப்பு உற்பத்தியை 25 பில்லியன் டாலருக்கு அப்பால் உயர்த்த இலக்கு வைத்துள்ளோம். நமது பாதுகாப்பு ஏற்றுமதியும் 5 பில்லியன் டாலர்களை தாண்டும்" என்று அவர் மேலும் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடங்கள் இந்தத் துறையை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். 

Input From: Hindu 

Similar News