இந்தியாவை குறைத்து மதிப்பிடும் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் - உலகளாவிய பட்டினி அறிக்கையில் உண்மையில் நடந்தது என்ன?
Statement of Ministry of Women and Child Development on Global Hunger Report 2021
Concern Worldwide மற்றும் Welt Hunger Hilfe, என்ற நிறுவனங்கள் கடந்த 14ம் தேதி வெளியிட்ட உலகளாவிய பட்டினி அறிக்கை 2021- குறித்த கருத்துகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கையில், ஊட்டசத்து குறைவான மக்கள் தொகை விகிதப்படி, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) மதிப்பீட்டின் அடிப்படையில் உலகளாவிய பட்டினி அறிக்கை 2021, இந்தியாவின் தர வரிசையை குறைத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது அடிப்படை யதார்த்தம் மற்றும் உண்மை அல்லாதது. இதில் சரியான முறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. இந்த அறிக்கையை வெளியிடும் முன், அதை வெளியிட்ட நிறுவனங்கள் அதை சரிபார்ப்பதில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் வேளாண் அமைப்பு மேற்கொள்ளும் முறை, அறிவியல் பூர்வமானது அல்ல. 4 கேள்விகள் அடிப்படையில் தொலைப்பேசி மூலம் கருத்து கேட்டு இந்த மதிப்பீடு செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை மதிப்பிட எடை, உயரம் போன்ற அறிவியல் பூர்வமான அளவீடுகள் தேவை. கொவிட் காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட பிரம்மாண்ட முயற்சியை இந்த அறிக்கை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இந்த கருத்து கணிப்பில், பதில் அளித்தவர் அரசிடம் இருந்து உணவு தானிய உதவி பெற்றாரா என ஒரு கேள்வி கூட இல்லை. இந்த கருத்து கணிப்பின் பிரதிநிதித்துவமும் சந்தேகிக்கும் வகையில் உள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, கொரோனா சூழலில் மத்திய அரசு, பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டம் (PMGKAY) , ஆத்ம நிர்பார் பாரத் திட்டங்களை (ANBS) அமல்படுத்தியது.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதம் குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கியது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.