மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி - இலக்கை தாக்கி அழித்து அபாரம்!
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, ஒடிசா சந்திப்பூரில் இருந்து இன்று, 2020, நவம்பர் 4- ஆம் தேதி நடத்திய மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை வெற்றி பெற்றது. முந்தைய பினாகா ராக்கெட்டை விட அதிக தூரம் சென்று இலக்கை எட்டும் வகையில் இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பூனாவை தலைமையிடமாகக் கொண்ட டிஆர்டிஓ ஆய்வக கூடங்களில் இந்த ராக்கெட் லாஞ்சர் வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 ராக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக சோதனை செய்யப்பட்டு, குறித்த இலக்கை தாக்கி அழித்து வெற்றி பெற்றன. இந்த மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பினாகா மார்க்- I வகை ராக்கெட்டுக்கு மாற்றாக செயல்படும். மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதனை ராணுவத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிப்பதற்காக இந்த ராக்கெட் அமைப்பில் நவீன வழிகாட்டுதல் தொழில்நுட்பமும், கட்டுப்பாட்டு அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 12 ஏவுகணைகளை ஏவும் திறனுடைய பினாகா ராக்கெட் அமைப்பின் மூலம், 44 வினாடிகளில் 12 வெவ்வேறு இலக்குகளை தாக்கி அழிக்க இயலும். பினாகா ராக்கெட்டின் மாா்க்-1 அமைப்பு 40 கி.மீ தொலைவு வரையுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனுடையது. பினாகா மாா்க்-2 அமைப்பு 75 கி.மீ தொலைவு வரையுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று டிஆா்டிஓ அதிகாரிகள் கூறினா்.