கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ - கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!
கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ - கோவையில் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வானதி சீனிவாசனின் முயற்சி!
கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் அவர்களது, கோவை மக்கள் சேவை மையம் & Dream zone நிறுவனம் சார்பில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக "தேசிய கைத்தறி தினத்தை" முன்னிட்டு நடைபெற்று வரும் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு விழா இவ்வருடமும் சிறப்புற நடந்து முடிந்துள்ளது.
தேசிய கைத்தறி தினம் வரலாற்று பின்னணி:
நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது. முதன்முறையாக 2015, ஆகஸ்ட் 7ஆம் தேதி, தரமான கைத்தறிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் 'இந்திய கைத்தறி முத்திரையை' அறிமுகம் செய்து, 'பிரயாஸ்' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், இத்தினத்தில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அனுபவம் மிக்கவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
கோவையில் கைத்தறி ஆடைகளுக்காக ஒரு ஃபேஷன் ஷோ:
கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி கைத்தறி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் இளைஞர்கள் மத்தியில் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை கல்லூரிகளில் ‘ஃபேஷன் ஷோ’ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் பா.ஜ.க தமிழகப் பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசன் ஒருங்கிணைக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரிடம் கைத்தறி குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முதல் நோக்கம். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும் இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாணவிகள் முற்றிலும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கைத்தறியிலான தாவணி, சேலை போன்ற ஆடைகளே அணிந்து வரவேண்டும். அணிவகுப்புக்குப் பின்னர் கைத்தறி குறித்த பொதுஅறிவுக் கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் வெற்றிப் பெறுபவர்களில் ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் இரண்டு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக கோவை மாவட்டத்தின் கல்லூரிகளிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும். கைத்தறி ஆடைகள், நெசவாளர்கள் என இதுகுறித்த விழிப்பு உணர்வை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.