தைவான் தமிழ்ச் சங்கம், தைவான் நாட்டில் தமிழர்கள் பண்பாட்டு நிகழ்வுகளை தைவான் மற்றும் பிற நாட்டு மக்களுக்காக இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டு தினவிழாவினை கொண்டாடி சிறப்பித்தது. தமிழர் பண்பாட்டு தினவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேஷன் வளாகத்தின் உள்ளரங்கத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் விழா சிறப்புற நடைபெற்றது.
இனிதே தொடங்கிய தமிழர் பண்பாட்டு தின விழாவில், தைவான் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் வரவேற்பு உரையாற்ற, சிறப்பு விருந்தினர்களாக இந்திய தைபே அசோசியேசனின் துணை பொது இயக்குனர் ரிஷிகேஷ் சுவாமிநாதன் , டாட்டா கன்சல்டன்ஸியின்(TCS, Taiwan) தைவான் நாட்டிற்கான தலைவர் கார்த்திகேயன் சேதுமாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தைவான் தமிழ்ச் சங்கத்தின் முத்தாய்ப்பான நிகழ்வான, "இளம் ஆராய்ச்சியாளர் விருது" தைவானில் பயிலும் தமிழ் மற்றும் தமிழர் அல்லாத இந்திய ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் பணமுடிப்புடன் கூடிய விருது வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. அவ்வண்ணமே இவ்வாண்டும், மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையின் எண்ணிக்கை மற்றும் தரத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் ஆறு ஆராய்ச்சியாளர்களுக்கு இவ்விருது வழங்கி கெளரவப்படுத்தியது.
தேர்ந்தெடுக்கபட்ட ஆராய்ச்சியாளர்களான ஸ்ரீராம் பாலசுப்பிரமணியன், சங்கிலி ஆறுமுகம் ஆகியோருக்கு ரிஷிகேஷ் சுவாமிநாதனும், சேதுபதி வேல்முருகன், கண்டி ஸ்ரீதர் ஆகியோருக்கு கார்த்திகேயன் சேதுமாதவனும், வெற்றி செல்வி, விவேகானந்தன் ஆகியோருக்கு தைவான் தமிழ் சங்கத்தின் முன்னாள் துணைதலைவர் முனைவர் சங்கர் ராமனும், இவ்விருதினை வழங்கி கெளரவப்படுத்தினர். மேலும் இந்த ஆண்டிற்கான 'தமிழ் ஆர்வலர் விருது' தைவானில் தமிழருக்கும், தமிழ் சங்கத்திருக்கும் உறுதுணையாய் சேவைகள் பலப்புரிந்த முனைவர் ராஜேஷ்குமாருக்கு டாக்டர் ஷி. ஜென் சென்னால் வழங்கப்பட்டது.