சவுதி அரேபியாவில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்!

Update: 2021-04-16 12:50 GMT

அசாதாரணமான சூழலும் தொடர் நோய்த்தொற்று காலமாக இருந்தாலும் பிறர் நலம் காக்கும் நோக்கத்தில் இங்கே பணி செய்யும் இந்தியர்கள் தங்களின் அளப்பரிய ரத்ததான சேவையை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்(TNTJ) தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து இந்த புனிதமான ரமலான் மாத உம்ரா பயணிகளுக்கு உதவும் வகையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளிக்கிழமை ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) மற்றும் கிங் பஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) இணைந்து நடத்திய 114-வது மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.


இந்த முகாமில் 76 குருதி கொடையாளர்கள் பதிவு செய்து 71 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.மேலும்‌, இம்முகாம் குறித்து பேசிய ரியாத் மண்டல தலைவர் செய்யது இப்ராஹீம் "கடந்த ஒன்றரை வருட காலமாக அசாதாரண சூழ்நிலையும் நெருக்கடியும் தொடர்ந்து இருந்து வரும் காலகட்டத்தில் பிறர் நலன் மற்றும் உம்ரா பயணிகளின் தேவைகளுக்காக இந்த மனிதநேய உதவியை TNTJ தொண்டர்களும், குருதி கொடையளிப்பவர்களும் சந்தோஷத்துடனும், தன்னார்வத்துடன் அதிக அளவில் கலந்து கொண்டு" இம்முகாமை சிறப்பித்திருந்தனர்.


மேலும் செய்யது இப்ராஹீம் பேசுகையில், இந்த தன்னார்வ உயிர் காக்கும் பணி என்றும் தொடரும் இதுபோன்ற நற்பணிகள் இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்திலும், நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்களையும், தேச பற்றையும் பிறநாடுகளில் பறைசாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாபெரும் இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தங்களின் குருதி தியாகத்தாலும் நிரம்ப செய்துள்ளது நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

Similar News