பக்ரைனில் வாழும் தமிழர்கள் சார்பில் நடைபெற்ற சிறப்புப் பன்னாட்டு பட்டிமன்றம்!

Update: 2021-04-19 12:34 GMT

சித்திரை விழா 2021 முன்னிட்டு சிறப்புப் பன்னாட்டுப் பட்டிமன்றம் பக்ரைன் செந்தமிழ் சொல்வேந்தர் மன்றம், தில்லி கலை இலக்கிய பேரவை முன்னின்று ஏற்பாடு செய்ய, உலகத் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து இணைய வழியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்ப்பணி செம்மல் குமார், சொல்வேந்தர் பொன் சங்கர பாண்டியன் கேட்ட கேள்விகளுக்கு சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்து அவையோரை மகிழ்வித்தார் கே.பாக்கியராஜ். நிகழ்ச்சியை முனைவர் கவிதா ராஜசேகர் நெறியாளராக நல்ல தமிழில் இன்முகத்துடன் நெறியாள்கை செய்தார்.


முன்னதாக யு.மேகநாதன் குழுவுடன், நாதஸ்வரம், மிருதங்கம் முழங்க மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. இயக்குநர் கே.பாக்கியராஜ் அவையோரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் ஆழமான கருத்துக்களை அவருக்கே உரித்தான பாணியில் சுவைபட பேசினார். உரத்த சிந்தனை தலைமை ஆசிரியர் உதயம் ராம் சிறப்பு விருந்தினரை வாழ்த்தி பேசினார்.

'மன அழுத்தம் அதிகரித்து வருவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது குடும்பச் சூழலா? வெளிப்புறச் சூழலா?' என்ற தலைப்பில் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இதன் நடுவராக, K.V.K. பெருமாள், பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி சென்றார். 'குடும்பச் சூழலே' என்ற அணியில் மருத்துவர் விஜய், தில்லியை சேர்ந்த திருமதி சீதாலட்சுமி ராமசந்திரன், மற்றும் பக்ரைனை சேர்ந்த ஷீனாஸ் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டு வாதாடினர்.


'வெளிப்புற சூழலே'என்ற தலைப்பில் திருமதி. விஜயலட்சுமி இராமசுப்பிரமணியம், நைஜீரிய தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் சங்கர் பிரபாகரன் மற்றும் ஓமன் நாட்டிலிருந்து திருமதி தருமாம்பாள் சீனிவாசன் ஆகியோர் திறம்பட வாதாடினர். 'மன அழுத்தம் அதிகரித்து வருவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது குடும்பச் சூழலே' என்று அருமையான தீர்ப்பை நடுவர் K.V.K. பெருமாள் வழங்கினார். இந்நிகழ்ச்சியை சூம் செயலி மூலம் நேரடியாக சுமார் 270 உலகத்தமிழர்களும் கண்டு களித்தனர்.

Similar News