நியூசிலாந்தில் கோலகலமாக அரங்கேறிய தியாகராஜ ஆராதனை!

Update: 2021-04-20 11:39 GMT

நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டி சார்பில் ஏப்ரல் மாதத்தில் தியாகராஜ ஆராதனை மிகச்சிறப்பாக, ஒனேஹங்காவில் உள்ள சாந்தி நிவாஸ் சென்டரில் நடத்தப்பட்டது. ஆக்லாந்தில் உள்ள இசை அறிஞர்கள், இசை ஆசிரியர்கள் டாக்டர். அசோகமல்லூர், யசோ மஹேந்திரன், பிரியா விஜய், மாலா நடராஜ், துளசி பிரபாகரன், கீதா நாராயணன் மற்றும் அவர்களிடம் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் இசை ரசிகர்கள் பலரும் சேர்ந்து கொண்டு தியாகராஜரின் சௌராஷ்ட்ரா ராகத்தில் அமைந்த மகா கணபதிம் என்ற கீர்த்தனையை பாடி தொடங்கி, பின் ஸத்குரு தியாகராஜர் இயற்றி பாடிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை மனமுருகி பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செய்தனர்.


 பின்னர் தியாகராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தொடர்ந்து வாய்ப்பாட்டு, வயலின், வீணை, புல்லாங்குழல் மற்றும் மிருதங்கம் கற்கும் மாணவ மாணவிகளின் கச்சேரி அமைந்தது. அவர்களை தொடர்ந்து இசை கற்பிக்கும் ஆசிரியர்களின் கச்சேரி தனி தனியாகவும் ஒரு குழுவாகவும் பாடி ஸ்ரீஸத்குருவிற்கு அவர் இயற்றிய கீர்த்தனைகளால் பாடி அஞ்சலி செலுத்தினர். இசை கலைஞர்களின் பாட்டும் அவர்களது மாணவ மாணவிகளின் கச்சேரியும் ரசிகர்களின் செவிகளை குளிரச் செய்‌தது.


மாணவ மாணவிகள் பாடியும், வீணை, வயலின் வீணை, மிருதங்கம் மற்றும் புல்லாங்குழல் இசைத்தும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியது மிகவும் பாராட்டத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் மங்களத்துடன் இசை நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இரண்டு மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது. நியூசிலாந்து கர்நாடிக் மியூசிக் சொசைட்டியின் தலைவர் ரவி நாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்

Similar News