இந்துமத காவியங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் சவூதி அரசு!

Update: 2021-04-21 11:46 GMT

இஸ்லாமின் தோற்றமாக கருதப்படும் சவூதி அரேபியா, பட்டத்து இளவரசரும், நாட்டின் செயல் தலைவருமான முகமது பின் சல்மான் தலைமையில், மாறி வரும் நவீன உலகிற்கு ஏற்ப, நாட்டில் பல புதுமைகளை புகுத்தி வருகிறது. சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் தாயகமான சவூதி அரேபியா நாட்டின் வளர்ச்சிக்காக விஷன் 2030 எனும் சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதில் கல்வி முதல் பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் உலக சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.


இதன் ஒரு அங்கமாக அங்கு பயிலும் பள்ளி மாணவர்கள் பிற நாட்டு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் விதமாக, புதிய பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்து மத புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற காவியங்களும் கற்பிக்கப்படுவது தெரியவந்துள்ளது. சவூதி அரேபியாவின் முதல் யோகா ஆசிரியரும், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் வென்ற நவுப் அல்மார்வாய், தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கான ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளதன் மூலம் இந்த விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவூதி அரேபியாவின் புதிய விஷன் 2030 தாராளமயமான மற்றும் சகிப்புத் தன்மையுள்ள எதிர்காலத்தை உருவாக்க உதவும். சமூக ஆய்வுகள் புத்தகத்தில் இன்று எனது மகனின் பள்ளித் தேர்வின் ஸ்கிரீன் ஷாட்டில் இந்து மதம், பௌத்தம், ராமாயணம், கர்மா, மகாபாரதம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் கருத்துகள் மற்றும் வரலாறு ஆகியவை குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அவளுடைய படிப்புக்கு உதவுவதில் நான் மகிழ்ந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுவே, இந்தியாவில் பள்ளிப் பாடத் திட்டத்தில் இது போல் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்பட்டிருந்தால், மதச்சார்பின்மை எனக் கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தியிருக்கக் கூட வாய்ப்புள்ளது. ஆனால் அந்நிய நாடு, அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்களின் தாயகமாக கருதப்படும் சவூதி அரேபியாவே தற்போது இந்து மத காவியங்களை தனது மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது வியப்பை அளித்துள்ளது. 

Similar News