சிங்கப்பூரில் இலக்கிய மன்றத்தின் சார்பாக நடைபெற்ற சுழலும் சொற்போர்!

Update: 2021-04-22 13:10 GMT

சிங்கப்பூர் தமிழ் இலக்கியமன்றத்தின் சார்பாக 'சுழலும் சொற்போர்' எனும் புதிய உத்தியைக் கையாண்டு இதற்கெனத் தனிச் சுவைஞர்களையே உருவாக்கிச் சிறப்பித்து வரும் தமிழ் இலக்கியக் களம் பதினான்காவது முறையாக பாவேந்தர் பாரதிதாசனார் விழாவை தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக ஏப்ரல் 21 ஆம் தேதி இணையவழி மிகச் சிறப்பாக நடத்தியது.

பட்டிமன்றப் பேச்சாளரும் வைணவ பக்தி இலக்கியத்தில் புலமை மிக்கவருமான கண்ணன் சேஷாத்திரி, கனக சுப்புரத்தினம் பாரதிதாசனாக உருவெடுத்த வரலாற்றைத் தமக்கே உரிய பாணியில் வைஷ்ணவ சம்பிரதாய மரபினைப் பிரதிபலிக்குமாறு எடுத்துரைத்து எழிலுரை ஆற்றியது அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் இலக்கியக் களத் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் நோக்க உரை ஆற்றுகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வண்ணம் அவர் பெரிதும் முக்கியத்துவம் தந்த பாடல்களைப் பற்றி 'சுழலும் சொற்போர்' நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார்.


தமிழகத்தைச் சேர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஓ.முத்தையா சொற்போர் நெறியாளுநராகச் செயல்பட்டார். இவை இரண்டுமல்ல அவர்தம் பாடல்களில் திரைத்துறைப் பங்களிப்பே முக்கியத்துவம் பெற்றிருந்தது என இராம்குமார் சந்தானம் தமது வாதத்தை சமர்ப்பித்தார். மூவரும் அவரவர் வாதங்களை எடுத்துரைத்த பின்னர் சுழலும் சொற்போர் மரபுப்படி பேச்சாளர்கள் வினாக்கள் தொடுக்க சொற்போர் சூடு பிடிக்கத் தொடங்கியது.


அனல் பறந்த வாத, பிரதிவாதி வாதங்களிடையே நெறியாளுநர் பல வரலாற்று நிகழ்வுகளைக் கூறிக் கலகலப்பை ஏற்படுத்தினார். மூவரின் வாதமும் நெறியாளுநரின் செய்திகளும் பார்வையாளர்கட்குப் பெரு விருந்தாக அமைந்தது. நிறைவாக நெறியாளுநர் முத்தையா மூவரின் வாதங்களும் சிறப்பாக இருந்தன. எனினும் கவிப்பேராசான் சுரதா பெரிதும் முக்கியத்துவம் தந்ததில் விஞ்சி நிற்பது தாய் மொழிக்கே எனத் தீர்ப்பளித்தார்.

Similar News