தமிழை மெருகூட்டும் விதமாக சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் மொழி விழா!

Update: 2021-05-02 01:00 GMT

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய குழந்தைகளுக்கு குறிப்பாக தமிழ் குழந்தைகளுக்கு தமிழின் மீது ஆர்வத்தை உண்டாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி விழா நடைபெறுகிறது. ஓவ்வொரு ஆண்டும் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்ற முழக்க வரியோடு வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிகுழுவின் ஆதரவோடு இவ்விழா சிறப்பாக அரங்கேறி வருகிறது. நோய்த்தொற்றின் காரணமாக இந்த விழா இவ்வாண்டு இணையதளம் வழியாக நடைபெற்றது.

இவ்விழாவில் 2014 ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதி தமிழ்கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை இணையத்தில் நடத்தியது. 


இந்த நிகழ்வின் நிகழ்ச்சி முத்து மாணிக்கம் மற்றும் திருமதி பிரதீபா நெறியாளர்களாக நின்று நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். அடுத்த அங்கமாக சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன் வரவேற்புரையை வழங்கினார். ஆறு தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இன்று உலகின் பல்வேறு கண்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்பட்டு வருகின்றது. அதனை அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ்கூறும் நல்லுலகம் என்ற தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


தமிழ்மொழி விழாவின் முக்கிய நோக்கம் சிங்கப்பூரில் தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலை பெற செய்வதோடு மாணவர்களிடையே தமிழ் பேசும் மற்றும் எழுதும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்வதே ஆகும். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் மாணவர்களுக்குப் போட்டிகளை நடத்தி வருகின்றது. தமிழ் மொழியின் சிறப்புக்களை அறிந்து ஒவ்வொரு ஆண்டும் தலைப்புகள் வித்தியாசமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

Similar News