தொல்லியல் குழுவால் இணையவழியில் நடைபெற்ற பன்னாட்டு பயிலரங்கம்!

Update: 2021-05-17 12:13 GMT

உலகளாவிய இளந்தமிழர் குழுவும், தென்புலத்தார் தொல்லியல் குழுவும் சார்பாக இணைந்து கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு நடத்தும் 4 நாள் பயிலரங்கம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தமிழரின் தொன்மையை ஆய்வு செய்யும் பணியை மேற்கொள்ள பல தன்னார்வலர்களை உருவாக்கும் முயற்சியில் இந்தப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு நாட்களும் பல நாடுகளை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட அகழாய்வில் விருப்பம் கொண்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்க ஏற்பாடு செய்த ஒரிசா பாலு அவர்கள் தன்னுடைய அனுபவத்தை, தான் செய்யும் ஆய்வுகளைப் பற்றி கூறினார்.


அதே நேரத்தில் அவரது உதவியுடன் ஆய்வுகளைச் செய்யும் பலரும் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது இந்த பயிலரங்கின் சிறப்பம்சமாகும். அகழாய்வு மற்றும் அதன் தொடர்பான பல துறைகளைப் பற்றிய அறிமுகம் கொடுக்கப்படும் என்று தொடங்கிய பயிலரங்கில், முதன்முதலாக பேராசிரியை ரேணுகா தேவி அவர்கள் மொழியியல் ஆய்வு பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறினார். அகழாய்வு துறையில் மொழியியலும் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள அது அடிகோலியது.


பின்னர் செஷல்ஸ் நாட்டில் இருந்து அலெக்ஸ் என்பவரும், லாவோஸ் நாட்டில் இருந்து சந்திரமோகன் என்பவரும், அயர்லாந்து நாட்டில் இருந்து லோகேஸ் என்பவரும் அமீரகத்திலிருந்து மோகன் பிரபு என்பவரும் தங்கள் நாட்டில் இருக்கும் தமிழ் பண்பாட்டு ஒப்புமைகள் பற்றியும் எடுத்துக் கூறினர்.

அமெரிக்காவிலிருந்து ராஜன் என்பவர் தான் கற்கும்போது அகழாய்வு துறையில் காஞ்சிபுரத்தில் செய்த ஆய்வைப் பற்றி எடுத்துக் கூறியது நம் தமிழகத்தில் அகழாய்வு எவ்விதம் நடக்கின்றது என்பதை அறிய உதவியது. எனவே தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் உலகெங்கிலும் எவ்வாறு பார்க்கப்படுகின்றது மற்றும் அவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்றும் இந்த பயிலரங்கில் முற்றிலுமாக விளக்கப்பட்டது.

Similar News