சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாதாந்திர கதைக்களம்!
ஒவ்வொரு மாதமும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் மாதாந்திர கதைக்களம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி இந்த மாதமும் வழக்கம்போல் இணையம்வழி நடைபெற்றது. மாதந்தோறும் நடைபெறும் கதைக்களத்தில், ஒருங்கிணைப்பாளர் பிரேமா மகாலிங்கம் இணையம்வழி இணைந்தவர்களையும், 'எழுத்தாளர் சந்திப்பு' அங்கத்திற்கு வந்திருந்த அறிஞர்களையும், எழுத்தாளர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் வரவேற்று, நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்த மாதக் கதைக்களத்திற்கு வந்திருந்த மாணவர் சிறுகதை, பொதுப்பிரிவுச் சிறுகதை மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நூல் அறிமுகம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகள் சில, நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டன. புதியஅங்கமான 'எழுத்தாளர்சந்திப்பு' அங்கத்தில் தமிழிலும் மலையாளத்திலும் எழுதி வரும் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் கலந்து கொண்டார். அவர் சமீபத்தில் புனைவும் வரலாறும் கலந்த "செம்பவாங்" எனும் நாவலை வெளியீடு செய்திருந்தார். இந்நாவல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 'எழுத்தாளர் சந்திப்பு' அங்கத்தை கல்வியாளர், எழுத்தாளர் பொன்சுந்தரராசு வழி நடத்தினார். இந்த நாவலுக்காக கடுமையான ஆய்வும் காலனித்துவ காலத்தில் செம்பவாங் வட்டாரத்தில் வாழ்ந்தவர்களில் சிலரைத் தேடிக் கண்டுபிடித்து நேர்காணல் செய்திருப்பதைக் குறிப்பிட்டு நூலாசிரியரின் முயற்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். பெண்ணுக்கான எழுத்தை ஒரு பெண் எழுதுவதால் அவளது ஆழ்மன வெளிப்பாடுகளை, உணர்வுகளை நிதர்சனங்களை நேரிடையாக வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக அமைகிறது என்று கவிமாலை தலைவர், கவிஞர் இன்பா கூறினார்.