துபாய் இந்திய தம்பதியினரின் புதுமையான முயற்சிக்கு குவியும் பாராட்டு!

Update: 2021-07-05 13:08 GMT

இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அத்வைதா சர்மா மற்றும் பிராசி ஆகியோர் தற்பொழுது துபாயில் வசித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் துபாயில் இருந்து அபுதாபிக்கு வேலை காரணமாக மாறிச் சென்றனர். வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை தாங்களே வளர்க்க திட்டமிட்டனர். வீட்டில் சிறு, சிறு செடி, கொடிகளை வைத்து அதன் மூலம் தக்காளி, சோளம் உள்ளிட்டவற்றை பெற்றனர். ஆனால் இவர்கள் வசிக்கும் பகுதியானது ஒரு பாலைவனம் சூழ்ந்த இடமாகும். ஆனாலும் இந்த தம்பதிகள் தற்போது வித்தியாசமான முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். இது குறித்து அத்வைதா சர்மா கூறுகையில், "எனது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இதன் காரணமாக ரசாயன கலப்பில்லாத ஊட்டச்சத்துள்ள காய்கறி, பழங்களை பெற வேண்டும் என தீர்மானித்தோம். இதனால் வீட்டிலேயே செடி, கொடிகளை வளர்க்க ஆரம்பித்தோம்.


இதற்கு தேவையான இயற்கை உரங்களுக்கு வீட்டிலிருந்து கிடைக்கும் உணவுக் கழிவுகளை பயன்படுத்தினோம். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. நாங்கள் வசித்து வரும் கலீபா நகர பகுதியில் உள்ள பாலைவன இடத்தில் மிளகாய், தக்காளி, வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு, மாம்பழம், கத்தரிக்காய், பப்பாளி உள்ளிட்ட 30 வகையான காய்கறி மற்றும் பழங்கள் கொண்ட 500 செடி, கொடிகளை 24 ச.மீ பரப்பளவில் வளர்த்தோம்.


இந்த செடி,கொடிகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது. குறைவான தண்ணீரை பயன்படுத்தி இந்த உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் இதனை வளர்க்க சிரமப்பட்டாலும், நாளடைவில் இது எங்களுக்கு போதிய அனுபவத்தை கொடுத்தது. இதனால் நாங்கள் வசிக்கும் பகுதியானது பச்சைப் பசேலென காட்சி அளிக்கிறது" என்று அவர் கூறினார். 

Similar News