இந்தியாவின் உதவியுடன் புனரமைக்கப்படும் 28 பாரம்பரிய தளங்களில் ஒன்றான செட்டோ மச்சீந்திரநாத் கோவிலின் மறுசீரமைப்பு பணிகள் காத்மாண்டுவில் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுடன் நேபாள தேசிய புனரமைப்பு ஆணையத்தின் (NRA) தலைமை நிர்வாக அதிகாரி சுஷில் கியாவாலி மற்றும் காத்மாண்டு பெருநகர நகர மேயர் பித்யா சுந்தர் சக்யா ஆகியோர் செட்டோ மச்சீந்திரநாத் கோவிலின் மறுசீரமைப்பிற்காக பூமி பூஜை மேற்கொண்டனர்.
"காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் இந்த பாரம்பரிய தளத்தின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்போடு இணைந்திருப்பது எங்களுக்கு மிகவும் பாக்கியம் என்று கருதுகிறோம்" என்று நேபாளத்திற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா கூறினார்.
"2015 பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் 8 மாவட்டங்களில் உள்ள 28 கலாச்சார தளங்களின் பாதுகாப்பு, மற்றும் மறுசீரமைப்பிற்காக பணியாற்ற இந்திய அரசும் நேபாள அரசும் ஒப்புக் கொண்டுள்ளன. 28 கலாச்சார பாரம்பரிய தளங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். செட்டோ மச்சீந்திரநாத் கோவில் இந்த புனரமைப்பின் கீழ் தொடங்கும் முதல் திட்டம்" என்று தூதர் குவத்ரா கூறினார்.
செட்டோ மச்சீந்திரநாத் கோவிலின் பாதுகாப்புப் பணிகள் நேபாள புனரமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் 28 கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களில் முதலாவதாகும். பாரம்பரிய தளங்களுக்கான புனரமைப்பிற்காக நேபாள ரூபாய் மதிப்பில் இந்திய அரசு 5,800 மில்லியன் தருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.