சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி கலை இலக்கியப் பேரவை, டோக்கியோ தமிழ்ச் சங்கம், மெல்பர்ன் தமிழ்ச் சங்கம், கானா தமிழ் அசோசியேசன், நைஜீரியா தமிழ்ச் சங்கம், தெலுங்கானா தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து வழங்கும் உலக மகளிர் தின பன்னாட்டு சிறப்புப் பட்டிமன்றம் மார்ச் 07 ம் தேதி நடைபெற உள்ளது.
Zoom செயலி வழியாக, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கும் இவ்விழாவில் மகளிர் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளது. டோக்கியோ தமிழ் சங்க தலைவர் கணேசன் ஹரி நாராயணன் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவனும், கவுரவ விருந்தினராக கானா தமிழ்ச் சங்க தலைவர் இளங்கோவன் சுகுமாறனும் பங்கேற்க உள்ளனர்.
வரவேற்புரையை தில்லி கலை இலக்கியப் பேரவை பொறுப்பாளர் ஆர்.தாரணியும், தொடக்கவுரையை தில்லி கலை இலக்கியப் பேரவை தலைவர் ப.அறிவழகனும் நிகழ்த்த உள்ளனர். டில்லியை சேர்ந்த வைஷாலியின் இறை வணக்கத்துடன் விழா துவங்க உள்ளது. ஒட்டு மொத்த நிகழ்வையும் லண்டனில் இரந்து சங்கீதா செல்வின் நெறியாள்கை செய்ய உள்ளார்.
முனைவர் விமலா அண்ணாதுரை நடுவராக செயல்பட, பாரதி கண்ட புதுமைப் பெண் கனவா? நனவா? என்ற தலைப்பில் பன்னாட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
இதில் கனவே என்ற அணியில் நைஜீரியாவில் இருந்து பத்மபிரியா திவாகர், பிரான்சிலிருந்து மலர்வாணி ஜெயராஜ், அமெரிக்காவில் இருந்து அகிலா கண்ணன் ஆகியோரும், நனவே என்ற அணியில்சிங்கப்பூரில் இருந்து அனுராதா வெங்கடேஸ்வரன், மும்பையில் இருந்து புவனா வெங்கட், கானாவில் இருந்து கோப்பெரும் செல்வி மோகன் ஆகியோரும் வாதிட உள்ளனர் இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.