சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்காக நடந்த இணையவழிக் கருத்தரங்கம்!

Update: 2021-03-09 11:55 GMT

சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்களுக்காக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளையின்) ஏற்பாட்டில், ஞாயிற்றுக்கிழமை, 7 மார்ச் 2021 அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இணையம் வழியாக "கொரோனாவை மறப்போம்! வெற்றிக் கதவைத் திறப்போம்!" என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர் கவிஞர் திரு தங்கம் மூர்த்தி, தன்முனைப்புச் சொற்பொழிவாற்றினார்.


"புத்தாக்க சிந்தனையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுவதுடன், ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதுடன் 'நான்' என்ற நிலையிலிருந்து 'நாம்' எனும் நிலைக்கு நகர்ந்து செல்வதன் மூலம் வெற்றிக் கதவுகளைத் திறக்க இயலும்" என்று நகைச்சுவையும் கவிச்சுவையும் கலந்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் வரவேற்புரை வழங்கினார்.


 நிகழ்ச்சியின் துவக்கத்தில், சமீபத்தில் இயற்கை எய்திய ஜமால் முஹம்மது கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் முஹம்மது சாலிஹ் ஆற்றிய கல்விப் பணிகளை நினைவுகூர்ந்து அவரது ஆத்மசாந்திக்கும், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு சுப அருணாச்சலம் ஆற்றிய தமிழ்ப் பணிகளை நினைவுகூர்ந்து அவரது ஆத்மசாந்திக்கும், ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்கப்பூரின் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், பொதுமக்களும் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Similar News