கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களை பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாக்கி இருக்கிறது. பலர் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதில் வெளிநாடு வாழ் தமிழர்களும் அடங்கும். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020-21 ஆண்டுகளில் வெளிநாடு வாழ் தமிழர்கள் பலர் தமிழ்நாடு திரும்பினர். ஜனவரி 31, 2021 வரை 3,66,890 வெளிநாடு வாழ் தமிழர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து விமானம் அல்லது கப்பல் மூலமாக தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானோர் வெவ்வேறு துறைகளின் திறன்களைப் பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரிந்து பலதுறைகளிலும் திறன் பெற்றோர், இந்த திறனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க ஏதுவாக அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் "புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம்" (NEEDS) என்ற திட்டத்தை மாவட்ட தொழில் மையம் வாயிலாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஜனவரி 1, 2020க்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய புதிய தொழில் தொடங்க விரும்பமுள்ள தொழில் முனைவோர் தங்களது மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் மையம் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை அணுகி இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.