இந்திய-அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி அமெரிக்காவின் 21வது சர்ஜன் ஜெனரலாக பதவியேற்றார். இதில் அவரது முக்கிய முன்னுரிமை நாட்டை கடுமையாக தாக்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் பதவியை அவர் இரண்டாவது முறையாக தற்போது பெற்றுள்ளார். முன்னதாக, 2011 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமா தடுப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைந்த மற்றும் பொது சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவில் பணியாற்ற அவரை நியமித்திருந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு 19 வது சர்ஜன் ஜெனரலாக நியமித்தார்.
அமெரிக்கா கொரோனா தொற்றுநோயை எதிர்த்து இன்னும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், நல்ல ஆரோக்கியம் உள்ள ஒரு உலகத்தை உருவாக்குவதற்கும் பணியாற்ற விவேக் மூர்த்தி பதவியேற்புக்கு பின் கூறினார். அவர் மேலும் "இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அறிவியலுக்கான குரலாகவும், மறுகட்டமைப்பு மற்றும் குணப்படுத்துவதற்கான பாதையில் நம் தேசத்தை ஆதரிக்கவும் தேசத்தின் மருத்துவராக இந்த பதவியை ஏற்கத் தயாராக உள்ளேன்" என்று டாக்டர் விவேக் மூர்த்தி கூறினார்.
முன்னதாக நேற்று அமெரிக்க செனட் சபையில் விவேக் மூர்த்தி 57-43 வாக்குகள் வித்தியாசத்தில் சர்ஜன் ஜெனரலாக உறுதி செய்யப்பட்டார். US சர்ஜன் ஜெனரலாக, விவேக் மூர்த்தி கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து ஜனாதிபதி பிடெனுக்கு அறிவுரைகளை வழங்குவார். மேலும் பொது சுகாதாரம் குறித்த மத்திய அரசின் முன்னணி குரலாக இருப்பார். 2013 ஆம் ஆண்டில், ஒபாமா டாக்டர் மூர்த்தியை சர்ஜன் ஜெனரலாக நியமித்த போது அவருக்கு வெறும் 37 வயது தான். மிக இளம் வயதில் இந்த பதவியைப் பெற்ற நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.