ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் சார்பில் விதிக்கப்பட்ட புதிய தடை!

Update: 2021-03-29 11:49 GMT

வெளிநாட்டில் வேலை பார்க்கும் பல்வேறு நபர்கள், தங்களுடைய சொந்த நாட்டிற்கு செல்கிற போது, வேலை பார்த்த நாட்டில் தனக்கு தேவையான அனைத்தையுமே தன் குடும்பத்திற்கு வாங்கி வருவது வழக்கம். ஆனால் அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தற்போது போடப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடு வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களை பாதிக்குமா? என்பதை இப்போது பார்ப்போம். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது? என அந்நாட்டு அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்கள் என்னென்ன பொருட்களை எடுத்து வரலாம் என்பதற்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி புதிய விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


எமிரேட்ஸில் இருந்து புறப்படுவோர் மற்றும் எமிரேட்ஸுக்கு வருவோர் என அனைவருக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். திரைப்பட புரஜெக்டர், ரேடியோ, CT பிளேயர், டிஜிட்டல் கேமரா, TV, ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை விமானத்தில் பயணிக்கும் பயணிகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.


மேலும், பரிசுப் பொருட்களின் மதிப்பு 3000 திர்ஹாம்ஸை தாண்டக்கூடாது. சிகரெட்டுகளை பொறுத்தவரை 200 சிகரெட்டுகளுக்கு மேல் எடுத்துச்செல்லக் கூடாது. 18 வயதுக்கு கீழானோர் புகையிலை பொருட்கள், மதுபானங்களை எடுத்துச்செல்லக் கூடாது. போதை மருந்துகள், சூதாட்ட கருவிகள், நைலான் மீன்பிடி வலை, பன்றிகள், யானை தந்தம், லேசர் பேனா, கள்ளநோட்டு, அணு கதிர் அல்லது துகள் கலந்த பொருட்கள், மத உணர்வுகளை புண்படுத்தும் படங்கள் அல்லது சிலைகள், பாக்கு ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொருட்களை எடுத்துவருவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு எச்சரித்துள்ளது.

Similar News