சிங்கப்பூரில் தமிழின் பெருமையைப் போற்றும் விதமாக 'தமிழை நேசிப்போம்' பாடல் வெளியீடு!

Update: 2021-04-09 11:54 GMT

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் தமிழ் மொழி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வேளையில், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளையின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர், தமிழ் மொழியின் அருமைகளையும் பெருமைகளையும் போற்றும் வண்ணம் 'தமிழை நேசிப்போம்' என்ற பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் இணையம் வழியாக வெளியிட்டபட்டது.


சிங்கப்பூர் இசைக்கலைஞர் பாடகர் 'இசை மணி' திரு. பரசு கல்யாண் இப்பாடலை இசையமைத்து காணொளியாக உருவாக்கியிருக்கிறார். சிங்கப்பூர் வாழ் இசைக்கலைஞர்களாகிய லக்ஷ்மி சங்கரன், ஜியா பாலாஜி, சோபனா ரேச்சல், தமிழினி, சஹானா கிரிஷ், சமிக்‌ஷா கிரிஷ், ரோஷன், ஸ்ரீராம், அனுபமா முரளி, கற்பகம் விஸ்வநாதன், ஆத்ரேயன் வெங்கடேஷ், மதுமிதா, மானஸா ஸ்மருதி ஸ்ரீநிவாஸ், ஷாய் சித்தாந்த், ஷாய் வேதாந்த், சுரேந்திரன் சங்கர், சஹஸ்ரா மற்றும் பரசு கல்யாண் ஆகிய 18 பாடகர்கள் முதன்முறையாக இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர்.


 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயல் தலைவர், திரு. நா. ஆண்டியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, இப்பாடலை இணையம் வழி வெளியீடு செய்து, இப்பாடலின் சிறப்பியல்புகளைப் பற்றி எடுத்துரைத்தார். அம்பை ஆழ்வான் நிகழ்ச்சியை தமிழ் மணம் கமழ சிறப்பாக வழி நடத்தினார். 'ஏப்ரல் மாதம் என்றாலே, தமிழ் மொழி விழாக்கோலம், தமிழ்க் காப்பியம் படிக்கச் சென்றாலே, சிந்தையில் ஆயிரம் குயில் பாடும்' எனும் பாடல் வரிகளைக் கொண்டு, தமிழ் மொழிப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடலின் இசையும் அமைந்துள்ளன.

Similar News