சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 'தமிழ்மொழி விழாவின்' இணையவழி கருத்தரங்கம்!
சிங்கப்பூரில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடைபெற்று வரும் தமிழ் மொழி விழா 2021ன் ஓர் அங்கமாக, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், 11 ஏப்ரல் அன்று நகைச்சுவை அரங்கம் ஒன்றை இணையம் வழியாக மிகச் சிறப்பாக நடத்தியது. "தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!" எனும் பிரதான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.
கல்வி சார்ந்த சமூக நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், கடந்த 11 ஆண்டுகளில் இதுவரை 103 நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாகச் செய்து முடித்து சாதனைப் படைத்திருக்கிறது" என்பது குறிப்பிடத்தக்கது.
இளையர்களை தமிழ் மொழியில் எழுதவும் பேசவும் ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சியின் "மாணவர் அங்கம்" பகுதியில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் முஹம்மது மாதிஹ், "தமிழை நேசிப்போம்" என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் மனோகரன் சுப்பையா வழங்கிய வாழ்த்துரையைத் தொடர்ந்து, முனைவர் மு. அ. காதர் இயற்றி, இசை மணி பரசு கல்யாண் இசையமைத்து 18 சிங்கப்பூர் வாழ் பாடகர்கள் முதன்முறையாக இணைந்துப் பாடிய 'தமிழை நேசிப்போம்' பாடலின் காணொளி இடம்பெற்று நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தது.
தமிழகத்திலிருந்து சிறப்புப் பேச்சாளராக இணையம் வழி கலந்துகொண்ட தொலைக்காட்சிப் புகழ், பட்டிமன்றப் பேச்சாளர், "நகைச்சுவை நாவலர்" செ.மோகன சுந்தரம், தமிழ்ச் சுவையும் நகைச்சுவையும் கலந்து சிறப்புரையாற்றினார். பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், சங்கத்தின் உறுப்பினர்களும், இளையர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்ட இந்த 'நகைச்சுவை அரங்கம்' சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் மொழி விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் நடந்தேறியது.