வாஷிங்டனில் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடைபெற இருக்கும் சித்திரைத் திருவிழா!
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் சித்திரை தேரோட்டமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் கடந்த ஆண்டைப்போல அழகர் மலையிலேயே எழுந்தருளி மீண்டும் முனிவருக்கு சாப விமோசனம் தரப்போகிறார். இந்த ஆண்டு சித்திரை திருவிழா வழக்கம் போல நடைபெற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் உள்ள வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், மாபெரும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது.
அமெரிக்கவில் உள்ள வாஷிங்டனில் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரைத் திருவிழா 2021 வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இணையம் வழியாக அரங்கேறுகிறது. கலை நிகழ்ச்சிகள், அலங்கார முளைப்பாரி அணிவகுப்பு, பறை இசை, தமிழ் அறிஞர்களின் கலந்துரையாடல் என்று பல அருமையான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கலைஞர்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே.யின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவர்கள் நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம்,விஜய்காந்த் போல் பலகுரலில் பேசி அசத்துவதில் வல்லவர்கள். கொரோனா தொற்று காலத்தில் வீட்டிலேயே அடைப்பட்டு இருக்கும் நம் வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவருடன் அமர்ந்து வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.