வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்க வாய்ப்பு: படிவம் 6A பற்றி தெரியுமா?

Update: 2021-03-18 11:40 GMT

தமிழகம் உட்பட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் எப்படி வாக்களிக்கலாம் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்பிற்காகவோ, படிப்பதற்காகவோ அல்லது வேறெனும் காரணங்களுக்காக சென்றிருக்கும் இந்திய குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில், இந்தியாவில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, www.mvsp.in அல்லது தேர்தல் ஆணையத்தின் www.eci.nic.in என்ற இணையதளத்தில் படிவம் 6A என்பதைப் பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்படும் தேவையான ஆவணங்களையோ அல்லது ஆதாரங்களையோ இணைத்து தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


 இந்தப் படிவம் சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் கிடைக்கும். இந்தப் படிவத்தை அஞ்சல் துறை மூலம் அனுப்புவதாக இருந்தால் அனைத்து ஆவணங்களின் இரண்டு பிரதிகளை சுய சான்று அளிப்புடன் வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதே சமயம், அலுவலரிடம் நேராக விண்ணப்பத்தை அளிக்க நேர்ந்தால் சரிபார்ப்புக்காக பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும்.


 விண்ணப்பத்தில் பெறப்பட்டுள்ள வீட்டு முகவரிக்கு வாக்குச்சாவடி அலுவலர் நேரில் சென்று விசாரித்து ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்த பின் வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற தனிப்பிரிவில் அவர்களின் பெயர்கள் இடம்பெறும். வெளிநாட்டு வாக்காளருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படமாட்டார்கள். வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்கும் போது பாஸ்போர்ட் ஆதாரமாகக் காண்பித்து வாக்களிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News