அமெரிக்காவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் NRI மாணவர்கள்: அதிகாரப்பூர்வ தகவல்!
அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் சீன, இந்திய மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏராளமான வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இதேபோல, ஏராளமான வெளிநாட்டவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் படித்து வரும் ஒட்டுமொத்த மாணவர்களில் 47 விழுக்காட்டினர் இந்திய மற்றும் சீன மாணவர்களாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. எனினும், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், 2020ஆம் ஆண்டில் 12.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கையில் 17.86 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்க பள்ளிகளில் 2019ஆம் ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை 72 விழுக்காடு சரிந்துள்ளது. அமெரிக்க கல்லூரிகளில் ஆங்கில மொழிக் கல்வி அல்லது வேறு படிப்புகளுக்காக இணைவோருக்கு F-1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல, தொழில்நுட்ப பயிற்சிகள் பெற வருவோருக்கு M-1 விசா வழங்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை F-1 விசா பெற்றவர்களின் எண்ணிக்கை 91 விழுக்காடும், M-1 விசா பெற்றவர்களின் எண்ணிக்கை 72 விழுக்காடும் குறைந்துள்ளது. அமெரிக்காவில் அதிகம் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவை சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், இந்தியாவை சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். அமெரிக்காவில் 382,561 சீனர்களும், 207,460 இந்தியர்களும், 68,217 தென் கொரியர்களும், 38,039 சவுதி அரேபியர்களும், 34,892 கனடியர்களும் கல்வி பயின்று வருவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.